உலகின் மிகப்பெரிய ஆலயம் - 2


தொடர்ச்சி....
 
புது இடத்தில் எனக்குத் தூக்கம் வருவது சிரமம். ஆனால், பயணக் களைப்பில் அதெல்லாம் பறந்து போனது. நல்ல தூக்கம். சாப்பிட்டவுடனே படுக்கப் போனதும் ஒரு காரணமாக இருந்திருக்கும். எட்டு மணிக்குத்தான் எல்லாரும் எழுந்தோம். நான், பரணி, ராஜூ மூவரும் ஓர் அறையில் தங்கிக் கொண்டோம். மகாதேவனும் நவீனும் ஓர் அறையில்.  
 
அறைக்கு நேர் எதிரே, அடக்கமான நீச்சல் குளம். வெளியே எழுந்து வந்து பார்த்தபோது, நல்ல மழை பெய்து துடைத்து விட்டது போல் இருந்தது தோட்டம். நீச்சல் குளத்தைச் சுற்றிலும் அழகான தோட்டம் போட்டிருந்தனர். சின்னச் சின்ன வெள்ளைப் பூக்கள். அரளிசெம்பருத்தி, கல்வாழை என வெப்ப மண்டலத்துக்கே உரிய பூக்கள். அறைக்கு வெளியே வராந்தாவில், கம்போடிய பாணி ஓவியங்கள் தொடர் வரிசையில் வரையப்பட்டிருந்தன. எல்லாமே இராமாயண, மகாபாரதக் காட்சிகள். நகல் ஓவியங்களாக இருந்தாலும் நல்ல ஓவியங்கள்.
 
விடுமுறை என்று வந்துவிட்டாலே அதற்கென ஒரு மனம் கூடிவிடுகிறது. வழக்கமான வேலையைச் செய்யாமல் மாற்றிச் செய்தாலே மனம் புத்துணர்ச்சி கொண்டு விடுகிறது. தங்கும் விடுதியிலேயே காலை உணவுக்கும் வசதி இருந்தது. அது எவ்வளவு பெரிய வசதி என்று இன்னும் இரண்டு நாள் கழித்துத் தெரிந்தது எங்களுக்கு. விடுதிக் கட்டணம் ஐம்பது அமெரிக்க டாலர்தான். என்னால் இன்னமும் நம்ப முடியவில்லை.
 
இந்தியாவாக இருந்தால் இந்தத் தூய்மைக்கும் விசாலத்துக்கும் பத்தாயிரம் ரூபாய் தீட்டி விடுவார்கள். இங்கே தங்கும் அறை கொள்ளை மலிவுக் கட்டணத்தில் கிடைக்கிறது. மலேசியாசிங்கப்பூரில் கூட இவ்வளவு மலிவான கட்டணத்தில், இவ்வளவு தூய்மையான அறை கிடைப்பது சிரமம். காலை உணவுக்கு முன் நான் போட்ட சட்டையைப் பார்த்து பரணியும் ராஜூவும் ஒரே கிண்டல். இப்படி ஒரு சட்டையைப் போட்டா எங்களையெல்லாம் யாரு பாப்பா என்று கேள்வி. இது கிண்டலா பாராட்டா என்று கேட்டால், அதற்கும் ஒரு வியாக்யானம் வைத்திருப்பார்கள் இருவரும். சரி பாராட்டு என்றே வைத்துக் கொள்வோமே ! போத்தீஸில் எடுத்த நாலு சட்டையில் ஒரு சட்டையை அன்று வெள்ளோட்டம் விட்டேன். தீபாவளி விளம்பரத்தில் கூட ஒரு ஆள் அந்தச் சட்டையைப் போட்டிருந்தார். ஏனோ தெரியவில்லை. சில வாரம் கழித்து வந்த விளம்பரத்தில் ஐந்து சட்டைகளில் ஒன்றாக இருந்த அந்தச் சட்டையை மட்டும் எடுத்து விட்டார்கள். சரி சட்டையை விடுவோம்.
 
சாப்பாட்டுக்கு வருவோம். சாப்பாடு சராசரிக்குச் சற்று மேல். பெரிய நட்சத்திர விடுதி அளவுக்கு அதிக வகைகள் இல்லை. ஆனால், அன்பாக கவனிக்கும் பணியாளர்கள் இருந்தனர். கேட்டதை உடனே சூடாகச் செய்து கொடுத்தனர். சாப்பிட்டு இரண்டாவது காஃபி அருந்திப் புறப்பட்டோம். எங்கே போவதுன்னு இன்னமும் முடிவாகலையே !
 
இன்று அங்கோர் வாட் போக முடியாது. அதற்கு ஒரு முழு நாள் வேண்டும். சரியான தூக்கம் இல்லாமல் அதை முழுமையாக ரசிக்க முடியாது என்பதால் மற்ற இடங்களைப் பார்க்கலாம் என்று முடிவானது. என் வீட்டில் வாடகைக்கு இருக்கும் கார்த்தி சொல்லி அனுப்பியிருந்தார். சார் கம்போடியாவில், ஹெலிகாப்டர் பயணம் இருக்காம். நாங்க பார்க்கலை. நீங்க எப்படியாவது போயிட்டு வாங்க ! என்று. அதனால் அதுபற்றி ஓட்டுநர்வழிகாட்டி ரா-வைக் கேட்டோம். பக்கத்தில்தான் அலுவலகம், சென்று விசாரிக்கலாம் என்றார். எட்றா வண்டியை !
 
உண்மையிலேயே ஹெலிகாப்டர் நிர்வாக அலுவலகம் பக்கத்தில்தான் இருந்தது. நாங்கள்தான் முதல் போணி என்று நினைக்கிறேன். ஒரு ஆளுக்கு 90 அமெரிக்க டாலர். எட்டு நிமிடப் பயணம். அங்கோர் வாட்டை  வலப்பக்கமாகச் சென்று பார்க்கலாம். பருந்துப் பார்வையில் சுற்றியுள்ள அகழியோடு சேர்த்து ஆலயத்தைப் பார்ப்பது, ஒரு தனி அனுபவம். விமானி தவிர, ஒரு பயணத்தில் குறைந்தது மூவராவது செல்ல வேண்டும். அதற்குக் குறைந்து வண்டி புறப்படாது. நாங்களோ ஐந்து பேர்.. ஒரு தடவைக்கு மூன்று பேர் என்றாலும் இரண்டாவது தடவைக்கு ஒரு ஆள் குறைந்தது. என்ன செய்யலாம் ?
 
ராஜூ நான் ரெண்டு வாட்டி பறக்கிறேன் என்று முடிவெடுத்தார். உலங்கு வானூர்திப் பயணம் உறுதியானது. (அதுதாங்க ஹெலிகாப்டருக்குத் தமிழ்ப் பதம்..) பயணச் சீட்டை வாங்கிக் கொண்டு நேரே சியாம் ரியெப் அனைத்துலக விமான நிலையத்தை அடைந்தோம். இது எனக்கு இரண்டாவது ஹெலிகாப்டர் பயணம். 1984-ல் என் அப்பா தஞ்சாவூரில் வருவாய்க் கோட்டாட்சியராகப் (RDO) பணியாற்றியபோது தஞ்சை மாவட்டத்தில் வெள்ளம் வந்தது. அப்போது வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு உணவுப் பொட்டலம் விநியோகிப்பதற்காக இராணுவத்தில் இருந்து ஹெலிகாப்டர் வந்தது. அதில் போய்ரொட்டி, புளிசாதப் பொட்டலங்களைப் போட்டு வந்தோம். அது அரை மணி நேரப் பயணம். பதின்ம வயதில் அந்தப் பயணத்தை முழுமையாக அனுபவித்தேனா தெரியவில்லை. ஆகவே, இம்முறை தவற விடக்கூடாது. சும்மா அசத்திரணும் என்ற முடிவோடு போனேன்.
 
நிக்கான் படக்கருவியைத் தொட்டுத் தடவி, மின்கல நிலையைச் சோதித்து உறுதிப்படுத்தி நாலு படமும் எடுத்துப் பார்த்து விட்டேன். விமான நிலையக் கம்பி வேலிக்கு வெளியே வாகனத்தை நிறுத்திக் காத்திருந்தோம். சிவப்பு நிற ஹெலிகாப்டர் தொலைவில் ஒரு தட்டான்பூச்சி மாதிரித் தெரிந்தது.  டப டப டப டப என்ற சத்தத்துடன் ஒய்யாரமாக வந்து இறங்கி நின்றது. முதல் பயணத்தில், நான், பரணி, ராஜூ மூவரும் ஏறிக் கொண்டோம். அதற்கு நடக்கும்போதே படம் எடுத்துக் கொண்டோம். உள்ளே வெள்ளைக்கார விமானி இருந்தார். சிறுவயது. எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து, இங்கே வந்து இதை ஓட்ட வேண்டுமென்று இவருக்கு எம்பெருமான் விதித்திருக்கிறார். நல்ல நட்பான மனிதர். பேச்சில் உண்மையான சிநேகம் தெரிந்தது. 
 
வலப்பக்க சன்னல் ஓரத்தில் ராஜூ. இடப்பக்க சன்னலோரம் எனக்கு. எனக்கு எதிரே, விமானிக்கு இணையாக உள்ள இருக்கையில் பரணி. உள்ளே உட்கார்ந்து காதில் ஹெட்ஃபோன் மாட்டிக் கொண்டோம். இல்லாவிட்டால்,ஹெலிகாப்டர் புறப்பட்டு விட்டால், அது போடும் சத்தத்தில், விமானியின் உத்தரவும் விளக்கமும் எங்களுக்குக் கேட்காது. அது வழியாகத்தான் தொடர்பு சாத்தியம்.
 
உட்கார்ந்து இருக்கை வார்களை மாட்டிக் கொண்டதுமே, ஜிவ்வென்று மேலே புறப்பட்டது ஹெலிகாப்டர். ரங்க ராட்டினம் சுற்றும்போது, அடிவயிற்றில் குபீரென்று ஒரு அசைவு வருமே ! அப்படி வருமென்று எதிர்பார்த்தேன். ஒன்றும் வரவில்லை. சாதாரணமாகத்தான் இருந்தது. விமான ஓடுதளத்தில் சின்னச் சின்ன இலகு ரக விமானங்கள் சில நின்று கொண்டிருந்தன. சட்டென வளைந்து திரும்பியதும், தொலைவில், அங்கோர் வாட் ஆலயத்தைச் சுற்றியுள்ள அகழியின் நீரில் சூரியன் பிரதிபலிப்பது தெரிந்தது. அங்கோர் வாட்டை நெருங்கும் முன், மலைக்கு நடுவே இருந்த இன்னோர் ஆலயத்தைக் காண்பித்தார் விமானி. தெளிவாகத் தெரியவில்லை என்றபோதும் ஒரு பாசிபடர்ந்த கற்குவியல் தெரிந்தது. அங்கோர் வாட்டும் அப்படித்தான் இருந்தது.    
 
 
முந்திய இரவில் மழை பெய்திருந்தது எங்கள் பாக்கியம். எல்லா இடங்களும், குளித்து விட்டு வந்து அம்மணமாய் நிற்கும் குழந்தைபோல் தெய்வீக அழகுடன் இருந்தன. அங்கோர் வாட்டைச் சுற்றிப் பெரிய அகழி. அதுவே ஒரு பிரம்மாண்டம். ஒன்றரை கிலோமீட்டருக்கு 1 புள்ளி 3 கிலோ மீட்டர் நீள, அகலம் கொண்ட அகழி. அகலம் 190-மீட்டராம். மேற்குப் பார்த்த ஆலயம் அங்கோர் வாட். அதன் தென் பகுதி அகழிக்கு மேலே சற்றுத் தள்ளிப் பறக்கிறது ஹெலிகாப்டர். ஆலயத்துக்கு நேர் மேலேயோ குறுக்கேயோ பறக்க அனுமதியில்லை. ஏதேனும் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு ஹெலிகாப்டர் கீழே விழுந்தால், ஆலயம் சேதமுற்றுவிடும் என்பதால், நேர்மேலே பறக்க அனுமதியில்லையாம். சரிதான். தேவையான நிபந்தனைதான் என்று நினைத்துக் கொண்டேன்.
 
படம் எடுக்கும் மும்முரத்தில் இயற்கையின் அழகைத் தவற விட்டுவிடக் கூடாது என்று நினைத்துக் கொண்டேன். சில படங்கள் எடுத்து விட்டுப் படக் கருவியை மூடி விட்டேன். சூரியனின் பொற் கிரணங்கள் அகழியில் பட்டுப் பிரதிபலிக்கையில், அதன் நடுவே ஆலயத்தைப் பார்த்தபோது சொல்லின்மை கைகூடியது. இதைக் கட்டிய மன்னனுக்குக்கூட கிடைக்காத வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறதே என்று நினைத்துக் கொண்டேன். தங்க ஜரிகைக்கு நடுவே மரகதக் கற்களைக் குவித்துப் போட்ட மாதிரி எனக்குள் ஓர் உணர்வு. ஆலயத்தின் முகடுகள் ஏதோ கனவு லோகத்தில் கட்டப்பட்ட கட்டங்களைப் போல் தெரிந்தன. இந்த கட்டட பாணி நான் இதுவரை என் வாழ்நாளில் அதிகம் பார்த்திராத முற்றிலும் புதிய பாணி. தென்னிந்திய திராவிடக் கட்டடக் கலைக்கும் இதற்கும் அதிகத் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. ஒரிசாவிலும் அதன் பக்கத்து வட்டாரங்களிலும் உள்ள வாழைப் பூ போன்ற வடிவமுள்ள கோபுரங்களை ஒத்திருந்தன அங்கோர் வாட் ஆலய முகடுகள்.
 
அகழிக்குத் தண்ணீர் வழங்கும் நீர்ப் பாதை, தொப்பூழ் கொடி போலத் தெரிந்தது மேலிருந்து பார்க்கையில். ப வடிவ சூலாயுதத்தை மேலிருந்து பார்ப்பதுபோல் இருந்தது. சுற்றிலும் திகட்டத் திகட்டப் பசுமை. தண்ணீர். மரங்கள். நல்லவேளை. இந்த வாய்ப்பைத் தவறவிடாமல் இருந்தோமே என்று நினைத்துக் கொண்டோம். கார்த்திக்கு நன்றி. இல்லாவிட்டால் இப்படி ஒரு பயணம் இருப்பதே தெரியாமல் போயிருக்கும். போன சுருக்கிலேயே ஹெலிகாப்டர் வளைந்து திரும்பி, விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தது. ஒன்பது நிமிடங்கள் ஆகியிருந்தது. நேரம் போனதே தெரியவில்லை. ஏதோ ஒரு கனவுக்குள் புகுந்து வெளிவந்தது போல் உணர்ந்தேன்.
 
 
ஆச்சு. என் ஆயுளில் நான் காண விரும்பிய இடங்களில் இரண்டில்  ஒன்றை,  எளிதில் பார்க்க முடியாத கோணத்தில் பார்த்து விட்டேன். நாளைஇதை அணு அணுவாகப் பக்கத்தில் இருந்து பார்க்க வேண்டும். அடுத்த கனவான எகிப்தியப் பிரமிடுகளை எப்போது காண்பேன் ? எப்போது அதுபற்றி இப்படி ஒரு கட்டுரை எழுதுவேன் 
 
- பொன். மகாலிங்கம், சிங்கப்பூர்
 
---------------------------------------------------------------------------------------------------------------------------------
பொன். மகாலிங்கம் - சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள - ponmaha2000@yahoo.com



Leave a Comment