சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்


சித்திரை விஷுவையொட்டி சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஐயப்பனை தரிசனம் செய்ய 4 மணிநேரம் வரை அவர்கள் காத்திருக்கும் நிலை நிலவுகிறது.
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் நடை சித்திரை விஷு காக கடந்த 10-ந்தேதி திறக்கப்பட்டது.
சபரிமலையில் வழக்கமாக மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜையின் போது அதிகளவு பக்தர்கள் குவிந்து சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்வார்கள். அதற்கு அடுத்தபடியாக சித்திரைவிஷுவுக்குதான் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.
இந்த ஆண்டும் சித்திரை விஷுவையொட்டி கோவில் நடை திறந்த முதல்நாளில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுவாமி ஐயப்பனுக்கு தினமும் நெய் அபிஷேகம் உள்பட விசே‌ஷ பூஜைகள் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் நாளை (14-ந்தேதி) சித்திரை மாத பிறப்பு கொண்டாட்டப்படுகிறது. ஆனால் கேரள பஞ்சாங்கத்தின்படி சித்திரை விஷு கொண்டாட்டம் சபரிமலையில் நாளை மறுநாள் (15-ந்தேதி) நடக்கிறது.
இதையொட்டி 15-ந்தேதி அதிகாலை 4.30 மணி முதல் 7 மணி வரை சித்திரை கனி காணுதல் நடக்கிறது. அன்று சபரிமலை சுவாமி ஐயப்பன் சன்னதியில் காய், கனிகள் மற்றும் புத்தாடைகள் படைக்கப்பட்டு சாமி தரிசனம் நடைபெறும். மேலும் சாமிதரிசனம் செய்யும் பக்தர்களுக்கு கோவில் மேல்சாந்தி சில்லரை நாணயங்களை கைநீட்டமாக வழங்குவார். தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடைபெறும்.
சித்திரை விஷுவையொட்டி சபரிமலையில் பக்தர்கள் அதிகளவு குவிந்து உள்ளனர். இதனால் சாமி தரிசனம் செய்ய 4 மணிநேரம் வரை அவர்கள் காத்திருக்கும் நிலை நிலவுகிறது. பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளதை தொடர்ந்து சபரிமலையில் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.



Leave a Comment