வேங்கடநாதன் பரிமளாச்சாரியார் ஆன வரலாறு


 

ராகவேந்திரரின் வாழ்க்கை மற்றும் அவரின் அற்புதங்களை சொல்லும் இத் தொடரின் சென்ற பதிவுகளின் சுருக்கம்.

திம்மண்ணரின் மனைவி கோபிகாம்பாள் திருமலை தெய்வத்தின் கருணையால் கர்ப்பவதியானாள். கி.பி.1595ஆம் ஆண்டு குருவாரத்தில் ,மிருகசீரிஷ  நட்சத்திரத்தில் காண்பவர் வணங்கத்தக்க தேஜஸ்வியான ஒரு ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தார்.வேங்கடவனிடம்  வைத்த வேண்டுதலினால் பிறந்த குழந்தை ஆதலால், குழந்தைக்கு வேங்கடநாதன் எனப் பெயரிட்டு மகிழ்ந்தனர். வேங்கடநாதனும்  வேதாந்த தர்க்க வியாகரணம், சாஹித்யம் மீமாம்சை முதலிய சாஸ்திரங்களைக் கற்றார். அத்துடன் வீணா கானத்திலும் சிறந்து விளங்கினார்.

மேலும் தன்னுடைய ஞானத்தை பெருக்கிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலிருந்த வேங்கடநாதன் கும்பகோணம் வந்து சேர்ந்தார்.அங்கு மடத்தில் ஸ்ரீ விஜயேந்திரருடன்  ஸ்ரீ சுதீந்திரரும் தங்கியிருந்தார். சாஸ்த்திர ஞானம் ஏற்பட சுதீந்திரரிடம் சிஷ்யனாக வேண்டும் என அவர் முன்பு நமஸ்கரித்து நின்ற வேங்கடநாதனை மிக்க மகிழ்ச்சியுடன் சீடனாக ஏற்றுக்கொண்டு பல சாஸ்திர விஷயங்களைக் கற்பித்து வந்தார்  சுதீந்திரர்.

  ஸ்ரீமத்வரின் பிரம்மசூத்திர பாஷ்யத்திற்கு  ஸ்ரீ ஜெயதீர்த்தர் கொடுத்துள்ள உரைநூல்' நியாயசுதா' என்ற நூலுக்கு விளக்கத்தைக் கூறிக் கொண்டிருந்த சுதீந்திரர்  திடீரென்று விளக்கம் சொல்ல இயலாமல்  பாதியில் நிறுத்திவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.அதையே நினைத்துக் கொண்டிருந்த வேங்கடநாதன் அப்படியே பனியில் படுத்து உறங்கிவிட்டார்.

நடுஇரவு, குரு சுதீந்திரர் சிஷ்யர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்க்க வெளியில் வந்தபோது அனைவரும் உறங்கிக் கொண்டிருக்க அங்கு வேங்கடநாதனை மட்டும் காணாததால் தேடிக் கொண்டே சென்றார்.

இனி ......

உடல் முழுவதும்  பனியில் நடுங்கிக்கொண்டிருக்க ,அந்தக் கொட்டும் பனியில் ஓலைச்சுவடிகளுக்கு மத்தியில் குளிரில் நடுங்கியவாறே உறங்கிக் கொண்டிருந்த  வேங்கடநாதனைக் கண்டார் குரு.  அவரருகே கிடந்த ஓலைச்சுவடிகளை எடுத்துப் பார்த்த சுதீந்திரர்  விக்கித்து நின்றார். வகுப்பில் தான் சொல்ல இயலாமல் பாதியில் விட்ட ‘நியாயசுதா’விற்கு அனைவருக்கும் புரியும்படியான ,எளிமையான உரையை வேங்கடநாதன் எழுதியிருந்ததைக் கண்டு உள்ளம் உருகினார்  குரு சுதீந்திரர். அதை போற்றும் விதமாக ,தன்னுடைய  மேல்  அங்கவஸ்த்திரத்தை அவருக்குப் போர்த்திவிட்டு வந்துவிட்டார்.

 மறுநாள் கண்விழித்த வேங்கடநாதன் ,குருவின் மேலாடை தன் மீது எப்படிவந்தது என அறியாமல் பதறிப்போனான் . அதை மரியாதையுடன் கைகளில் ஏந்திக் கொண்டு குருவின் முன் நின்றார். வேங்கடநாதனை  எதிர்பார்த்துக் காத்திருந்த குரு புன்னகையுடன் அவரை வரவேற்று அன்புடன் ,“வேங்கடநாதா,அரிய நூலுக்கு மிகச் சிறப்பாக விளக்க உரை  எழுதியுள்ளாய். இந்த உரைநூலுக்கு ‘சுதா பரிமளா’என்று பெயர் சூட்டுகிறேன். இந்த அரியநூல் எழுதிய உனக்கு ‘பரிமளாச்சாரியார்’ என்ற பட்டத்தைச் சூட்டுகிறேன்."என்று அகமகிழ்ந்து கூறி அவருக்கு மந்த்ராக்ஷதை கொடுத்து ஆசீர்வதித்தார்.

சகல சாஸ்திரங்களையும் தன் குருவிடமிருந்து குறைவற  கற்றுணர்ந்த வேங்கடநாதன் மீண்டும் புவனகிரிக்கு வந்தார். தம்பிக்கு சரஸ்வதிபாய் என்ற மங்கை நல்லாளை அண்ணன் குருராஜர்  திருமணம் செய்து வைத்தார். வேங்கடநாதனும் சரஸ்வதிபாயும் ஆதர்ச  தம்பதிகளாக இனிதே இல்லறம் நடத்தி,தக்க காலத்தில் லக்ஷ்மி நாராயணன் என்னும் புதல்வனைப் பெற்றனர். ஆனால் பூர்வ ஜன்ம பலன் வேங்கடநாதனையும் விட்டு வைக்க வில்லை.

மகானின் சரித்திரம் தொடரும்.....



Leave a Comment