உலகின் மிகப்பெரிய ஆலயம் - 19

28 September 2017
K2_ITEM_AUTHOR  பொன். மகாலிங்கம்

அரும்பொருளகத்துக்குள் உறைந்து கிடந்த காலம், சில சிலைகள் வழியாக உயிர்கொண்டு எழுவது போலிருந்தது எங்களுக்கு. நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தாலும் இந்த மண்ணை விட்டுச் செல்ல மனிதர்களுக்கு மனமிருப்பதில்லை. ஏதோ ஒரு வடிவில் தன்னுடைய இருப்பை விட்டுச் செல்லவே ஒவ்வோர் உயிரும் ஏங்குகிறது போலும். இங்கே உள்ள கலைப் பொருட்களை வடித்த கைகள் இன்று இல்லை. அதனால் என்ன ? அவர்கள் உருவாக்கிய பொக்கிஷங்கள் இன்னும் பல நூற்றாண்டுகளைப் பார்க்கும்.

அரும்பொருளகத்தின் கிழக்குப் புறக் காட்சிக்கூடத்திலிருந்து நாங்கள் சுற்றிப் பார்க்கத் தொடங்கினோம். கிடந்தகோல விஷ்ணுவைப் பார்க்குமுன், கண்ணாடிப் பெட்டிகளில் பலவிதமான உலோகத் திருமேனிகள் இருந்தன. எல்லாமே கம்போடியாவின் பல பகுதிகளில் இருந்து திரட்டப்பட்டு இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சில பெரிய திருமேனிகள் தனியான கண்ணாடிப் பெட்டியிலும், சிறிய திருமேனிகள் இரண்டு அடுக்குக் கண்ணாடிப் பெட்டியிலும் வைக்கப்பட்டிருந்தன.

பெரும்பாலான உலோகத் திருமேனிகள் அளவிற் சிறியனவாகவும் நல்ல நிலையிலும் இருக்கின்றன. எஞ்சியவை, பெரிய திருமேனிகளின் உடைந்த பாகங்கள். இடக் கை மட்டும் ஒன்று கிடைத்துள்ளதை வைத்து அந்தத் திருமேனியின் மொத்த அளவை ஊகித்துப் பார்த்தால் அது பெரியதாக இருந்திருக்க வேண்டும். அவ்வளவு பெரிய உலோகச் சிலைகளை வார்த்து எடுக்கும் நுட்பம் பண்டைக் கம்போடியர்களுக்குத் தெரிந்திருக்கிறது.

செப்புத் திருமேனிகள் எல்லாமே பலவிதமான வண்ண வேறுபாட்டில் உள்ளன. திருமேனிகளில் கலந்துள்ள உலோகங்களின் விகிதாச்சாரத்தைப் பொறுத்து அவற்றின் வண்ணம் வேறுபடுகிறது. வெண்கலம் என நாம் குறிப்பிடுவது பெரும்பகுதி செம்பு கலந்த கலப்பு உலோகத்தைத்தான். வெண்கலத் திருமேனியைப் பொதுவாக செப்புத் திருமேனி என்றுதான் அழைப்பர். தங்கம், வெள்ளி, செம்பு, துத்தநாகம், பாதரசம், பியூட்டர் (தகரமும் காரீயமும் கலந்த கலவை) இரும்பு, காரீயம், பிஸ்மத் ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்தத் திருமேனிகள் வார்க்கப்பட்டுள்ளன.

ஆக அடர்த்தியான வண்ணம் கொண்ட திருமேனியே ஆகத் தூய்மையான உலோகத்தில் வார்க்கப்பட்டது. அந்த அளவுக்குத் தூய்மை இல்லாத உலோகத்தால் வார்க்கப்பட்ட திருமேனிகள் பச்சை அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும். வெண்கலப் பொருட்களைப் பார்த்தால் அவற்றைக் கையால் தொட்டு அது எவ்வளவு குளிர்ச்சியாக இருக்கிறது என்று பார்ப்பது கம்போடியர்களின் பழக்கம். அதிலிருந்து அந்தப் பொருளில் எவ்வளவு பாதரசம் கலந்திருக்கிறது என்று சொல்லிவிடுவார்களாம் நிபுணர்கள்.

இங்குள்ள மணற்கல் சிற்பங்களுக்கும் உலோகத் திருமேனிகளுக்கும் அதிக ஒற்றுமை உண்டு. கல் சிற்பத்தில் என்னென்ன வேலைப்பாடு உள்ளதோ அதே வேலைப்பாடு உலோகத் திருமேனியிலும் உண்டு. அதேவேளையில், உலோகத்தில் மட்டுமே வார்க்கப்பட்ட திருமேனிகள் எனச் சில இங்கே உள்ளன. அவற்றைப் போன்ற மணற்கல் சிற்பங்கள் வேறு இல்லை. எடுத்துக்காட்டாக, 4 கால்கள், 16 கரங்களுடன் கூடிய  நடன ஹேவஜ்ரர், எட்டுக் கரங்களுடன் கூடிய மைத்ரேயர் திருமேனிகளைக் குறிப்பிடலாம்.

ஹேவஜ்ரர் சிலை நமது நடராஜர் சிலையைப் போன்றது எனலாம். ஒற்றைக் காலில் ஒட்டுமொத்த எடையும் குவியும் வண்ணம் உள்ளது. சிற்பக் கலையில் மிகுந்த தேர்ச்சியுள்ளவர்களால் மட்டுமே அப்படிப்பட்ட திருமேனிகளை வடிக்க முடியும். சிலையின் எடையைத் துல்லியமாகக் கணித்து அதன் வடிவ அழகில் சமரசம் செய்துகொள்ளாமல் சமநிலை காண்பது எளிதான பணியல்ல. உள்ளங்காலும் உச்சந்தலையும் நேர்கோட்டில் வந்தால்தான் நடராஜ நர்த்தனம் திருத்தமாக இருக்கும்.

இந்த வடிவச் சிக்கல் காரணமாகத்தான் நம் நாட்டு சிவாலயங்களில் கல் நடராஜர் சிற்பங்களை அதிகம் காண முடியாது. கருவறைச் சுற்றுச் சுவர்களில் நாம் காணும் எல்லா நடராஜர் சிற்பங்களும் கிட்டத்தட்ட சற்றே மேம்பட்ட, எடை பரவலாக்கப்பட்ட புடைப்புச் சிற்பங்களே.

ஆடல் வல்லானின் இனித்தமுடன் எடுத்த பொற்பாதத்துக்கு, கீழிருந்து வரும் கல் முட்டுக் கொடுத்திருக்கும். அல்லது அம்பலவாணனின் இடுப்புவரை பின்புறக் கல்லோடு இணைந்தவாறிருக்கும். உலோகத் திருமேனிகளைப் போல், ஊன்றிய வலக்காலில் மட்டும் எல்லா எடையையும் தாங்கிய கல் நடராஜரை இதுவரை நான் கண்டதில்லை.

தஞ்சைப் பெரிய கோயில், கங்கை கொண்ட சோழீஸ்வரம் உள்ளிட்ட எல்லா கல் நடராஜர் சிற்பங்களும் இப்படி இருப்பதைக் காணலாம். (இதைப் படிக்கும்போது, நம் கண்ணெதிரே, நமக்குத் தெரிந்து, நம்முடைய அலட்சியத்தால், மிகச் சில மாதங்களுக்கு முன் சிதைந்து இடிந்து விழுந்த மானம்பாடி சிவன் கோயிலில் இருந்த, கொள்ளை அழகுமிக்க நடராஜர் சிலையை நினைத்துப் பார்ப்போம்.)

ஊர்த்துவ தாண்டவர் சிற்பமும் கிட்டத்தட்ட நடராஜர் சிற்பத்தைப் போன்றதுதான். பாண்டியர் காலக் கோயில்களில் எல்லாம் வீரபத்திரரோடு காணப்படும் ஊர்த்துவ தாண்டவர் சிலைகளும் முதுகு, இடக் காலுக்குப் பின்னால் மண்டபப் பெருந் தூண்களோடு சேர்த்துச் செதுக்கப்பட்டிருக்கும். கஜசம்ஹாரமூர்த்தி சிலை, கல்லில் இன்னும் கஷ்டம். உடலைத் திருகிக் கொண்டு நிற்பது போன்ற வடிவத்தில் சமநிலை காண்பது மிகக் கடினமானது. உலோகத் திருமேனிகளில் கூட, உரித்த கரித்தோல், திருவாசியுடன் இணைந்து எடையைப் பரவலாக்கி இருக்கும்.

கம்போடிய அரும்பொருளகத்திலுள்ள முக்கியமான ஹேவஜ்ரர் சிலை, ஊன்றிய இடக்கால்(கள்) நுனி தவிர, இடுப்பிலிருந்து கால்களுக்கு நடுவே இறங்கும் அலங்காரத் துணியால் முட்டுக் கொடுக்கப்பட்டு வடிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், 16 கைகள், மூன்று நிலைகளாக உயரும் எட்டுத் தலைகள் உள்ள இந்தத் திருமேனி, கம்போடியச் சிற்பிகளின் கைவண்ணத்துக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

ஹேவஜ்ரர், வஜ்ரயான பௌத்தப் பிரிவைச் சேர்ந்த போதிச்சத்துவர். நடராஜர் முயலகனை மிதித்து ஆடுவதுபோல் ஒன்றன் மேல் ஒன்றாய்க் கிடைமட்டமாக அண்ணாந்த நிலையில் அடுக்கப்பட்ட குழந்தைகள் மேல் இடக்காலை ஊன்றி ஆடுகிறார் ஹேவஜ்ரர். அந்தக் குழந்தைகளின் சடலம் மனிதர்களை காம, க்ரோத, மோக மாச்சர்யங்களுக்கு ஆட்படுத்தும் மாரனின் குறியீட்டு வடிவம். இரண்டு கால்களுக்குப் பின்னால் மேலும் இரண்டு கால்கள் இருப்பதை உற்றுப் பார்த்தால்தான் தெரியும்.

முதல் அடுக்கில் மூன்று தலை. அடுத்த அடுக்கில் 4 தலை. உச்சியில் ஒன்று என எட்டுத் தலைகள். எல்லாத் தலைகளிலும் நெற்றிக் கண் உள்ளது. வலப்பக்கமுள்ள எட்டுக் கைகளிலும் விதவிதமான விலங்குகளை வைத்திருக்கிறார் ஹேவஜ்ரர். இடப்பக்கமுள்ள எட்டுக் கைகளில் அமர்ந்த கோலத்திலுள்ள பலவித மனிதர்களை உள்ளங்கையில் தாங்கியிருக்கிறார். இதற்கெல்லாம் என்ன அர்த்தம் என்று தேடிப் படிக்க வேண்டும். சினமிக்க காக்கும் கடவுள் எனச் சொல்லப்பட்டாலும் எல்லா முகங்களிலும் எல்லையற்ற கனிவும் கருணையும்தான் தெரிகிறது. நெடுங்காலம் மண்ணுக்குள் புதைந்துகிடந்த திருமேனி போலும். முகம் அரித்துப் போயிருக்கிறது. எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்தாலும் அலுக்காத சிலை. அங்கோர் பாணியைச் சார்ந்த 12ஆம் நூற்றாண்டுத் திருமேனி இந்த ஹேவஜ்ரர். நடுத்தர உயரம்தான் என்றாலும் நுணுக்கமான சிலை.

புனோம்பென் அரும்பொருளகத்தில் அடுத்து நாம் கவனிக்க வேண்டியவை இரண்டு மைத்ரேயர் சிலைகள். ஒன்று ஏழாம் நூற்றாண்டு. மற்றது பத்தாம் நூற்றாண்டு. ஏழாம் நூற்றாண்டு மைத்ரேயர் 35 செ.மீ உயரம். நான்கு கைகள். முழங்கால் வரையுள்ள ஒரே ஒரு துண்டுமட்டும் அணிந்தவாறு காணப்படும் இந்த மைத்ரேயரின் முகத்தில் தென்படும் புன்னகை அபாரமானது. சிரிக்க எத்தனிக்கும்முன் எடுத்த படம் போன்ற நிலையில் பிரியத் தொடங்கும் உதடுகள். முன்கைகள் முழங்கைக்குப் பிறகு இல்லை. பின்னங்கைகள் இரண்டும் வித்தக முத்திரையில் உள்ளன. ஜடாபாரமாகக் கட்டிய முடிக்கு நடுவே ஒரு ஸ்தூபி போன்ற முடிச்சு உள்ளது.       

பத்தாம் நூற்றாண்டு மைத்ரேயர், கொஞ்சம் உயரமானவர். 75 செ.மீ. மொத்தம் எட்டுக் கைகள். முன் கை இரண்டும் தான முத்திரையில் உள்ளன. எஞ்சிய ஆறு கைகளும் வித்தக முத்திரையில் உள்ளன. இவரது ஆடை கொஞ்சம் வேலைப்பாடுகளுடன் உள்ளது. இலேசாக முறுக்கிய, அழகான மீசையுண்டு இவருக்கு. மெல்லிய தாடியும் உண்டு. வடிந்த காதுகள். நான்கு நிலைகளாக மகுடம்போல் தலைமுடி கட்டப்பட்டிருக்கிறது.

 

இந்த இரண்டு முக்கியமான திருமேனிகளைத் தவிர, உலோகப் பிரிவில், தலையும் கால்களும் இல்லாத ஓர் ஆண் தெய்வத்தின் உடல் மட்டும் கொண்ட திருமேனி ஒன்று உள்ளது. வலப்பக்கக் கால் முழுவதுமாக இல்லை. இடக்கால் முழங்கால் வரை உள்ளது. இடக் கை இல்லை. வலக்கை முழங்கை வரை உள்ளது. 11ஆம் நூற்றாண்டுத் திருமேனி. அரும்பொருளகச் சேகரிப்பு அறையிலிருந்து 2000ஆம் ஆண்டுதான் வெளியே காட்சிக்குக் கொண்டு வரப்பட்டதாம். மடிப்பு மடிப்பாக உள்ள ஆடை இடைக்குக் கீழ் மட்டும் உள்ளது. திறந்த மார்பில் அணிகலன் ஏதும் இல்லை. 11ஆம் நூற்றாண்டின் பாப்புவான் பாணித் திருமேனி என்கிறது அரும்பொருளகக் கையேடு.

சுண்டு விரல்மட்டும் நீண்ட இடக் கரம் ஒன்று உள்ளது ஓரிடத்தில். கட்டை விரல் உள்ளிட்ட அத்தனை விரல்களிலும் மோதிரங்கள் உள்ளன. உள்ளீடற்ற கை. எந்தத் திருமேனியினுடையது என்பதை ஊகிக்க முடியவில்லை. தாவும் நிலையிலுள்ள அனுமன், இரண்டு கை, நான்கு கைகளோடு அமர்ந்த நிலையிலுள்ள கணேசர் விக்கிரகங்கள் ஐந்தாறு உள்ளன. ஒரு விநாயகர் பின்னங்கைகளில் சங்கும் சக்கரமும் ஏந்தியிருக்கிறார். 13ஆம் நூற்றாண்டுத் தும்பிக்கையாழ்வார் !

ஆவுடையார் மீது நிற்கும் நிலையில் மூன்று திருமேனிகள் உள்ளன. சிவா, விஷ்ணு, லட்சுமி என்கிறது கையேடு. விஷ்ணுவுக்கு சங்கு, சக்கரம் ஏந்திய நான்கு கரங்கள். சிவனுக்கு இரண்டு கரங்கள். ஒன்றில் திரிசூலம். மற்றொன்று என்னவென்று அடையாளங்காண முடியவில்லை. இதே போல் பௌத்தத் திருமேனிகள் மூன்று உள்ளன ஒரே பீடத்தில். நடுவே நாகபுத்தர். பாம்பணை மேல் பத்மபீடத்தில் பத்மாசனத்தில் அமர்ந்த கோலம். புத்தருக்கு வலப்பக்கத்தில் லோகேஸ்வரர் நான்கு கரங்களோடு. இடப்பக்கத்தில் பிரஜ்னபரம்பிதா. இவர் நமக்குப் புதியவர். மஹாயான பௌத்தத்தில், முழுமை பெற்ற விவேகி என்ற பொருளாம் இந்தப் பெண் தெய்வத்துக்கு. இந்தத் திருமேனி வலக்கையில் சுவடிக்கட்டும் இடக் கையில் தாமரை மொக்கும் வைத்திருக்கிறது. வாக்தேவி ??? 13ஆம் நூற்றாண்டுத் திருமேனி இது. வித்தியாசமானது நமக்கு. தனித் தனியாகச் செய்து பொதுவான பீடத்தில் அமர்த்தியுள்ளனர் இந்தத் திருமேனிகளை.

இந்து ஆலயங்களில் பயன்படும் திருவாசியைப் போன்ற வடிவத்தில் ஒன்று இருந்தது. மகர தோரணத்தின் முடிவில் நாக முகப்புடன் இருந்தது அது. இத்துடன் சில புத்தர் சிலைகள், கருடன், சிங்கச் சிலைகள் என நிறைவாக இருந்தது உலோகப் பகுதி.

 

 பொன். மகாலிங்கம்

 

 

பொன். மகாலிங்கம் - சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள - This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.