மக்களின் வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்துவதற்காக பிறவி எடுத்த வேங்கடநாதன்

24 August 2017
K2_ITEM_AUTHOR 

 

 

மக்களின் வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்துவதற்காக பிறவி எடுத்த வேங்கடநாதன்

 

சென்ற பதிவின் தொடர்ச்சி.......

 திம்மண்ணரின் மனைவி கோபிகாம்பாள் திருமலை தெய்வத்தின் கருணையால் கர்ப்பவதியானாள். கி.பி.1595ஆம் ஆண்டு குருவாரத்தில் ,மிருகசீரிஷ  நட்சத்திரத்தில் காண்பவர் வணங்கத்தக்க தேஜஸ்வியான ஒரு ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தார்.

 

வேங்கடவனிடம்  வைத்த வேண்டுதலினால் பிறந்த குழந்தை ஆதலால், குழந்தைக்கு வேங்கடநாதன் எனப் பெயரிட்டு மகிழ்ந்தனர் பெற்றோர்.குழந்தையின் முகப் பொலிவைக் கண்டு பெற்றோர் மட்டுமின்றி ஊர் மக்களே பிரமித்தனர். அந்த தெய்வீகக் குழந்தைப் பிறந்ததினால் புவனகிரியும் புனிதமடைந்தது.

உரிய நேரத்தில் குழந்தைக்கு அன்னப்பிராசனம் செய்து வைத்து மூன்று வயதில் அக்ஷராப்யாஸமும்  செய்து வைத்தார் திம்மண்ண பட்டர். தாயாரின் ஹரி கீர்த்தனைகளையும் ,தந்தையார் இறைவன் முன் அனுதினமும் பாராயணம் செய்வதையும் தன் தாயின் கருவறையில் இருந்து கேட்டுக் கொண்டே வளர்ந்திருந்தான் வேங்கடநாதன்.

 குடும்பம் வறுமையில் சுழல, சுசீந்திரரின் கட்டளையை ஏற்று மீண்டும் கும்பகோணம் வந்து சேர்ந்தார் திம்மண்ணர்.  ஸ்ரீமடத்தில் வித்வத்சபையில் தான் கலந்துகொள்ளும்போது வேங்கடநாதனையும் தவறாது உடன் அழைத்துச் செல்வார் திம்மண்ணர். சிறுவனின் தேஜஸைக் கண்ட சுசீந்திரருக்கு  அவர் மீது  மிகுந்த பற்று உண்டாயிற்று. திம்மண்ணரின் இறுதிக் காலத்தில்,வேங்கடநாதன் தமையன் குருராஜனிடம் ஒப்படைக்கப்பட்டான்.

 தமையன்  குருராஜன், தந்தையாரின் மரணத்திற்கு பின்,தந்தையின் ஸ்தானத்தில் இருந்து  வேங்கடநாதனுக்கு உபநயனம் செய்வித்து வித்யாப்யாசத்தின் பொருட்டு மதுரை லக்ஷ்மிநரசிம்மாச்சாரிடம் அனுப்பிவைத்தார்.அவரிடம் வேங்கடநாதனும்  வேதாந்த தர்க்க வியாகரணம், சாஹித்யம் மீமாம்சை முதலிய சாஸ்திரங்களைக் கற்றார். அத்துடன் வீணா கானத்திலும் சிறந்து விளங்கினார்.

 மேலும் தன்னுடைய ஞானத்தை பெருக்கிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலிருந்த வேங்கடநாதன் கும்பகோணம் வந்து சேர்ந்தார்.அங்கு மடத்தில் ஸ்ரீ விஜயேந்திரருடன்  ஸ்ரீ சுதீந்திரரும் தங்கியிருந்தார். இவர்கள் முன் சென்று பணிந்து நின்ற வேங்கடநாதனின், முக தேஜஸையும், லட்சணங்களையும் பார்த்து, இவர் சாதாரண பிறப்பல்ல என்பதை அறிந்து இருவரும்  பரவசப்பட்டனர். இவர் மக்களின் நன்மைக்காகவும் அவர்களின் வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்துவதற்காகவும் பிறவி எடுத்துள்ளதை புரிந்துகொண்ட இருவரும் வேங்கடநாதனை ஆசீர்வதித்தனர்.

 சாஸ்த்திர ஞானம் ஏற்பட சுதீந்திரரிடம் சிஷ்யனாக வேண்டும் என அவர் முன்பு நமஸ்கரித்து நின்ற வேங்கடநாதனை மிக்க மகிழ்ச்சியுடன் சீடனாக ஏற்றுக்கொண்டு பல சாஸ்திர விஷயங்களைக் கற்பித்து வந்தார்  சுதீந்திரர்.

ஒருநாள்  குரு பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போதே இன்று பாடம் போதும் என்று சொல்லி எழுந்து விட்டார்.அனைவரும் படுக்கச் சென்று விட்டனர். ஆனால் வேங்கடநாதனோ தனிமையில் அமர்ந்து கொண்டு குரு சொன்னவற்றையே சிந்தித்துக் கொண்டிருந்தார்.

 அன்றைய பாடம்  ஸ்ரீமத்வரின் பிரம்மசூத்திர பாஷ்யத்திற்கு  ஸ்ரீ ஜெயதீர்த்தர் கொடுத்துள்ள உரைநூல்' நியாயசுதா' என்ற நூலுக்கு விளக்கத்தைக் கூறிக் கொண்டிருந்தார். திடீரென்று விளக்கம் சொல்ல இயலாமல்  பாதியில் நிறுத்திவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.அதையே நினைத்துக் கொண்டிருந்த வேங்கடநாதன் அப்படியே பனியில் படுத்து உறங்கிவிட்டார்.

 நடுஇரவு, குரு சுதீந்திரர் சிஷ்யர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்க்க வெளியில் வந்தபோது அனைவரும் உறங்கிக் கொண்டிருக்க அங்கு வேங்கடநாதனை மட்டும் காணாததால் தேடிக் கொண்டே சென்றார்.

 

 

மகானின் சரித்திரம் தொடரும்.....