உலகின் மிகப்பெரிய ஆலயம் - 18

19 August 2017
K2_ITEM_AUTHOR 

நாலே நாலு ஆண்டுகள் நீடித்த கம்யூனிஸ்ட் ஆட்சி கொன்று குவித்த கம்போடியர்களின் எண்ணிக்கை சுமார் 17 இலட்சம் !... இது அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட எண்ணிக்கை. உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகம் என்கின்றன மனித உரிமைக் குழுக்கள். பல்வேறு நம்பகமான இணையப் பக்கங்களில் படித்த தகவல்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது கம்யூனிஸ்ட் அரசால் மடிந்தவர்கள் எண்ணிக்கை 20 இலட்சத்திலிருந்து 35 இலட்சம் வரை வேறுபடுகிறது. மொத்த மக்கள்தொகையில் கிட்டத்தட்ட கால்பங்கினர் கொன்றொழிக்கப்பட்டனர். வதை முகாமில் உறுப்பினர் ஒருவரையாவது பலி கொடுக்காத கம்போடியக் குடும்பம் ஒன்றுகூட இல்லை என்று சொல்லிவிடலாம்.

பசி, பட்டினி, மிதமிஞ்சிய உடலுழைப்பு, சித்திரவதை, தொற்று நோய்கள், கொலை ஆகிய காரணங்களால் மடிந்தது மக்கள் கூட்டம். இலங்கை போல் இது இனப் பகைமையால் விளைந்த அழிவல்ல. சிங்களர், தமிழர் என்ற பிரிவினைபோல் கம்போடியாவில் இனப் பிரிவினை ஏதுமில்லை. கொன்றதும் கம்போடியர்களே... மாண்டதும் கம்போடியர்களே. சொந்த நாட்டு மக்களைக் கொன்று குவிக்க அப்படி என்ன காரணம் இருந்திருக்க முடியும் ?

கொலைக்குக் காரணமான கெமரூஷ் ஆட்சி நாயகன் போல் போட். அவருக்குத் துணையாக இன்னும் இருவர். கியூ சம்ஃபான், நுவோன் சியா. மூவருமே ஃபிரான்சில் கல்வி கற்ற கம்யூனிஸ்ட்டுகள். 1960-களில் தொடங்கியது கம்யூனிஸ்ட்டுகளின் ஆயுதக் கிளர்ச்சி.

நாட்டின் வட-கிழக்கில் அடர்ந்த காட்டுப் பகுதியைத் தளமாகக் கொண்டு செயல்பட்ட அது தொடக்கத்தில் அவ்வளவாகக் கண்டுகொள்ளப்படவில்லை. ஆனால், 1970-இல் வலதுசாரி இராணுவம் அமெரிக்க ஆதரவாளர்களோடு மேற்கொண்ட ஆட்சிக் கவிழ்ப்பில், நாட்டுத் தலைவர் இளவரசர் நொரோடம் சிஹானூக் வீழ்த்தப்பட்டார். அப்போது சிஹானூக்கிற்கு ஆதரவாக அரசியல் அரங்கில் நுழைந்தது கெமரூஷ். மெல்ல மெல்ல அதன் ஆதரவுத்தளம் விரிவடைந்தது.

சுமார் ஐந்து ஆண்டுகள் நீடித்த உள்நாட்டுப் போரின் விளைவாக, கிராமப் புறங்களில் கெமரூஷ் செல்வாக்குப் பெற்றது. முதலில் தலைநகர் புனோம் பென்னைக் கைப்பற்றிய கெமரூஷ் படை, 1975-இல் நாடு முழுவதையும் கைப்பற்றியது. தலைவர் போல்போட் மலைப்பகுதியில் வசித்தபோது அங்குள்ள பழங்குடியினம் பணம் என்றால் என்னவென்றே அறியாமல் தன்னிறைவோடு வாழ்ந்து வந்தது அவருக்குள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த மலைவாழ் மக்களிடம் பௌத்த சமயமோ வேறெந்த சமயமுமோ பரவியிருக்கவில்லை.

கம்யூனிச சித்தாந்தங்களோடு மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறையையும் சேர்த்துக் கலக்கி, தமக்குள் ஒரு கொள்கையை உருவாக்கிக் கொண்டார் போல்போட். சகாக்களுக்கும் அதை போதித்து ஏற்றுக்கொள்ளச் செய்தார். கம்போடியாவில் விளைந்த எல்லா அனர்த்தங்களுக்கும், இந்தத் தவறான புரிதல்தான் மூலகாரணம்.

எல்லாருக்கும் எல்லாமும் சொந்தம். பணம் கூடாது. சமயம் கூடாது. தனிமனிதச் சொத்துரிமை கூடவே கூடாது. கல்வி வேண்டாம். அறிவு வேண்டவே வேண்டாம். அறிவாளிகளைக் கொன்று புதைத்துவிட்டுத்தான் மறுவேலை. வெளிநாட்டு உறவுக்குத் தடை. அந்நிய மொழிகளைக் கற்கக் கூடாது, பேசக் கூடாது. அந்நியரோடு உறவாடக் கூடாது. விவசாயம் செய்யத் தெரியாதவன், விவசாய வேலை செய்யாதவன் உயிர் வாழவே அருகதையற்றவன், முதல் குற்றவாளி.. இவைதான், கெமரூஷ் அரசின் ஆதாரக் கொள்கைகள். இதற்கு உடன்படாத எல்லாரும் எதிரிகளே..

1975-இல் ஆட்சியைப் பிடித்ததும் போல்போட்டும் சகாக்களும் நடைமுறைப்படுத்திய கொள்கைகளால் கம்போடியா சின்னாபின்னமானது. கல்வியாளர்கள், நிபுணர்கள், அறிவுஜீவிகள் அடையாளங் காணப்பட்டு முதலில் கொல்லப்பட்டனர். இதனால், தனது தேசிய முன்னேற்றத்தில் இன்னமும் ஒரு தலைமுறை பின்தங்கிப் போனது கம்போடியா. கம்போடியாவை உலக அரங்கிலிருந்து தனிமைப்படுத்திய போல்போட், புனோம் பென் போன்ற பெரிய நகரங்களில் இருந்து குடிமக்களைக் காலிசெய்து கிராமங்களை நோக்கி ஓட வைத்தார். தனது கொள்கைகளை, நடவடிக்கைகளை விமர்சித்தால் சித்திரவதை, கொலை என்று பேயாட்டம் ஆடினார் போல்போட்.

போல்போட்டின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தியவர்களில் பெரும்பாலோர், கிராமப்புறங்களைச் சேர்ந்த பதின்ம வயதினர். வதை முகாம்களில் சக கம்போடியர்களை இவர்கள் வதைத்த கதை பக்கம் பக்கமாக நீள்கிறது. S-21 சிறைச்சாலை அப்படிப்பட்ட ஒரு சித்திரவதை முகாம். அதைப் பார்க்க எங்களுக்கு நேரமில்லாமற் போனது பெரிய சோகம். உண்மையில் அது ஓர் உயர்நிலைப் பள்ளி. அங்கு நேர்ந்த கொடுமைகளை முழுமையாக விவரித்தால் உங்களில் பலரால் இதைப் படித்தபின் தூங்க முடியாது.

எடுத்துக்காட்டுக்கு ஒன்று. ஆண்கள், பெண்கள், குழந்தைகளைக் கொல்ல, துப்பாக்கி ரவையை வீணடிக்க விரும்பாமல் கையில் கிடைத்த கனமான பொருட்களைக் கொண்டு தாக்கியே கொல்வார்களாம். பிள்ளைகளின் கால்களைப் பிடித்துக்கொண்டு தலையை அறைந்து மோதிக் கொல்வதற்கென்றே அங்கு ஒரு மரம் உண்டு. இப்போதும் அந்த மரம் அங்கே இருக்கிறது. 

அந்தப் பள்ளிக்கூடம், நடந்த கொடுமைகளின் சாட்சியாக இன்னமும் பாதுகாக்கப்படுகிறது. அங்கும் மற்ற பல வதை முகாம்களிலும் கொல்லப்பட்டு கூட்டம் கூட்டமாகப் புதைக்கப்பட்டனர் கம்போடியர்கள். ஆழமாகக் குழிவெட்டிக் கூடப் புதைக்க நேரமில்லை கொடுங்கோலர்களுக்கு. கொல்லப்பட வேண்டிய கூட்டம் காத்திருக்கிறதே... குறைந்த ஆழத்தில் புதைத்ததால் இலேசான மழை பெய்தால் கூட இப்போதும் ஆங்காங்கே எலும்புகளும் மண்டையோடுகளும் வெளிக் கிளம்பும்.

நான்கு ஆண்டுகள் நீடித்தது இந்தக் கெமரூஷ் ஆட்சி. 1979-இல் கம்போடியாவை ஊடுருவிய வியட்நாமியப் படைகளால் ஒருவழியாக கெமரூஷ் ஆட்சி முடிவுக்கு வந்தது. கெமரூஷ் தலைவர்கள், காட்டுப் பகுதிக்குள் ஓடிப் பதுங்கிக் கொண்டனர். நாளடைவில் அவர்களின் செல்வாக்கு மறைந்து, கம்போடியா வெளி உலகத் தொடர்புக்கு வந்தபோதுதான், 1975-முதல் 1979-வரை அங்கு நடந்த கொடுமைகள் வெளிச்சத்துக்கு வந்தன. சித்திரவதை முகாமில் இருந்தவர்களைப் படம் எடுத்துப் பதிவு செய்தவர் இன்னமும் உயிரோடுதான் இருக்கிறார். அந்தப் படங்கள் பல கதைகளைச் சொல்லாமல் சொல்லின.

வதை முகாமில் தப்பிப் பிழைத்தவர்கள் சொன்ன கதைகளைக் கேட்டு விக்கித்துப் போனது அனைத்துலக சமூகம். கில்லிங் ஃபீல்ட்ஸ் என்றொரு ஹாலிவுட் திரைப்படம், நடந்த கொடுமைகளை ஆவணமாகப் பதிவு செய்தது. பின்னர் வந்த அரசாங்கம், போல்போட்டை அவரது வீட்டிலேயே சிறை வைத்தது. 1998-இல் அவர் எந்தத் தண்டனையும் அனுபவிக்காமல் மாண்டுபோனார்.

கெமரூஷ் ஆட்சியில் அதிபராகப் பதவி வகித்த கியூ சம்ஃபானுக்கும், மற்றொரு முக்கியப் புள்ளியான நுவோன் சியாவுக்கும் ஐக்கிய நாட்டு நிறுவன ஆதரவோடு இயங்கும் கம்போடிய நீதிமன்றம் 2014-இல் ஆயுள்தண்டனை விதித்தது. இன அழிப்பு, மனித குலத்துக்கு எதிரான குற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் அந்தத் தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற பல குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இப்போதும் அந்த இருவர் மீதும் விசாரணை நடந்து வருகிறது.

“எல்லாமே வியட்நாமியச் சதி” என்று சாதித்துவரும் இருவரும், இன அழிப்பு என்று சொல்வதே தவறு என்கின்றனர். “பசிப் பிணியைப் போக்க, உடனடியாக மக்கள் தொழிலாளர் முகாம்களில் உழைக்குமாறு பணிக்கப்பட்டனர். இது ஒரு குற்றமா ஐயா?” என்று கேட்கிறார் கியூ சம்ஃபான்.

கம்போடியாவின் இப்போதைய பிரதமர் ஹுன் சென்னே கெமரூஷின் அந்நாளைய உறுப்பினர்தான். வியட்நாமுக்குத் தப்பிச் சென்ற அவர், பின்னர் வியட்நாமிய ஆதரவோடு அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் தலைமைப் பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளார். ஆகவே இது வியட்நாமியச் சதி என்கின்றனர் கெமரூஷ் முன்னாள் தலைவர்கள். கெமரூஷ் ஆட்சிக் காலத்தில்தான் கம்போடியக் கலைப்பொருட்கள் பெரிதும் சிதைக்கப்பட்டன, களவுபோயின. கழுத்தில்லா புத்தர் சிலை எல்லாம் கெமரூஷின் கைங்கர்யம்தான். இத்தனை களேபரத்தையும் தாண்டி இவ்வளவு மிஞ்சியிருப்பதே கூட நமது நல்லூழ் என்றுதான் சொல்ல வேண்டும்.

கெமரூஷ் படையினருக்கும் வியட்நாமியப் படையினருக்கும் இடையே நடைபெற்ற சண்டையின் சாட்சியாக அங்கோர் வாட் ஆலயத்தில் இன்றும் சில துப்பாக்கிச் சூட்டுத் தடயங்களைப் பார்க்கலாம். கெமரூஷ் ஆட்சிக் காலத்தில் களவுபோன பல அரும்பொருட்கள் சோத்பி, கிறிஸ்டிஸ் போன்ற உலகின் முன்னணி ஏல நிறுவனங்களால் ஏலம் விடப்பட்ட சம்பவங்கள் உண்டு. கம்போடிய அரசாங்கம் இப்போது அதைத் தடுத்து நிறுத்தி அவ்வாறு அடையாளம் காணப்படும் சிலைகளைத் திரும்பிப்பெறப் போராடி வருகிறது.

2014-இல் அமெரிக்கா இரண்டு திருட்டுச் சிலைகளைத் திருப்பித் தந்தது. உலகெங்கும் உள்ள அரும்பொருளகங்களும் கலைப்பொருள் சேகரிப்பாளர்களும் கம்போடிய அரும்பொருட்களைத் திருட்டுச் சந்தையில் வாங்கியிருந்தால், அன்புகூர்ந்து அதைத் திருப்பித் தந்துவிடுங்கள் என்று வலியுறுத்தி வருகிறது கம்போடியா. இந்தியப் பாரம்பரியச் செல்வங்களைக் கொள்ளையடித்து விற்பதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டிருந்த சுபாஷ் சந்திர கபூர் போன்ற பணக்காரத் திருடர்கள் விற்பனை செய்த அரும்பொருட்கள் உலகெங்கும் உள்ள தனியார் அரும்பொருளகங்களை அலங்கரித்து வருகின்றன.

அண்மைக் காலமாக அதுபற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், சிலைகளின் ரிஷிமூலம், நதிமூலம் கேட்காமல் எந்தக் கலை நிறுவனமும் எதையும் வாங்குவதில்லை. கம்போடியாவுக்கு நேரில் சென்ற பிறகுதான் அங்கே இவ்வளவு கலைச் செல்வங்கள் இருக்கின்றன என்பதே எங்களுக்குத் தெரியவந்தது. அதுவரை அங்கோர் வாட் பற்றி மட்டும்தான் படித்திருந்தோம். ஆனால், புனோம் பென்னிலுள்ள அரும்பொருளகத்துக்குள் நுழைந்ததும்தான் தெரிந்தது, கல்லில் மட்டுமல்ல, உலோகத் திருமேனி வார்ப்பிலும் கம்போடியர்கள் வெளுத்துக் கட்டியிருக்கிறார்கள் என்று.

அரும்பொருளக நுழைவுக் கட்டணம் 5 டாலர்தான். உலகின் உண்மையான பொக்கிஷங்களைப் பாதுகாத்துப் பராமரிக்கும் அரும்பொருளகங்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். என்னைப் பொறுத்தவரை புத்தகங்களுக்கும் அரும்பொருளகங்களுக்கும் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கத் தயார்.

புனோம் பென்னிலுள்ள அரும்பொருளகம், பாரம்பரியக் கெமர் கலை பாணியில் கட்டப்பட்ட மிக அழகான கட்டடம். அந்தக் கட்டடத்தின் அழகே நம்மை அசத்திவிடுகிறது. பசுமையான, இதமான, கம்பீரமான முகப்பு. எந்தவொரு நாட்டின் அரும்பொருளகமும் அந்தந்த நாட்டுப் பாரம்பரியக் கட்டட வடிவமைப்போடு இருக்க வேண்டும் என்பது என்னுடைய எதிர்பார்ப்பு. சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகம் மிக அழகான பிரிட்டிஷ் கட்டடத்தில் அமைந்திருக்கும். அது உள்நாட்டுப் பாரம்பரியக் கட்டடம் இல்லையென்றாலும்கூட சிங்கப்பூரின் தட்ப-வெப்பச் சூழலுக்கேற்ற அதன் பழமையும் வடிவமைப்பும் அற்புதமாக இருக்கும். மிகச் சிறப்பாகப் பராமரிக்கப்படுகிறது அது.

சென்னை அரும்பொருளகமும் பிரிட்டிஷார் அமைத்ததுதான். சொல்லப் போனால், இந்தியாவின் இரண்டாவது ஆகப் பழமையான அரும்பொருளகம் நமது சென்னை அரும்பொருளகம்தான். இந்தியாவில், கொல்கத்தாவுக்கு அடுத்தபடியாக பிரிட்டிஷார் அரும்பொருளகம் கட்டியது சென்னையில்தான். இந்தியாவைச் சுற்றி அப்போது பிரிட்டிஷ் ஆளுகைக்கு உட்பட்டிருந்த நாடுகளில் இருந்து திரட்டப்பட்ட கலைச் செல்வங்கள், கொல்கத்தாவிலும் சென்னையிலும்தான் காட்சிக்கு வைக்கப்பட்டன.

இது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் ? எந்த வரலாற்று ஆசிரியராவது நமக்கு இதைக் கற்பித்து அதன் அருமையை உணர்த்தியிருக்கிறாரா? சென்னை அரும்பொருளகத்தின் அருமை, பிற்காலத்தில் அங்கு செப்புத் திருமேனிகளுக்கான தனிக் கட்டடம் உருவாக்கப்படும்போது அதைத் திட்டமிட்டு வடிவமைத்த அதிகாரிகளுக்கும் பொறியாளர்களுக்கும் தெரிந்திருந்ததா? போய்ப் பாருங்கள். எவ்வித ரசனையுமின்றி ஒரு மாபெரும் சரக்குக் கிடங்குபோல் கட்டிப் போட்டிருக்கிறார்கள்.

உள்ளே இருக்கும் திருமேனிகள் எல்லாம் நம் மூதாதையரின் ரசனையும் திறமையும் மேதமையும் வெளிப்படும் பொக்கிஷங்கள். அதைக் காட்சிப்படுத்தும் இடமோ மிகச் சாதாரணமானது. சிங்கத்தின் பாலைத் தங்கக் கிண்ணத்தில் அல்லவோ வைக்க வேண்டும்? சும்மாவா வைரத்தை நீல வெட்வெட் துணியில் பொதிந்து காட்சிக்கு வைக்கிறார்கள் ?

இந்தியாவும் பொருளாதாரத்தில் உயரும்போது தனக்கான அழகிய அரும்பொருளகங்களை வடிவமைத்துக் கட்டிக்கொள்ளும் என்று நம்புவோம். கம்போடிய அரும்பொருளகம் வெளியிலிருந்து பார்க்கும்போதே எங்கள் எதிர்பார்ப்பைத் தூண்டியது. உள்ளே இருந்த கலைப் பொருட்களோ எங்கள் எதிர்பார்ப்பையும் மிஞ்சிவிட்டன. விவரம் தெரிந்த நாள்முதல் எத்தனையோ சிலைகள், புடைப்புச் சிற்பங்கள், செப்புத் திருமேனிகள், ஆலய வழிபாட்டிலுள்ள விக்கிரகங்களைப் பார்த்திருக்கிறேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அழகு. செப்புத் திருமேனிகளில் சோழர்காலச் சிலைகளை எவராலும் மிஞ்சமுடியாது என்றே இறுமாந்து போயிருந்தேன் நான்.

அதற்கு எடுத்துக்காட்டாக, தஞ்சை அரண்மனை வளாகக் கலைக் கூடத்திலுள்ள அம்மையுடன் ரிஷப வாகன தேவர், வள்ளி-தெய்வானையோடு கூடிய முருகன், பிக்‌ஷாடனர், கல்யாண சுந்தரர், சந்திரசேகரர் சிலைகளைச் சொல்லலாம். திருவெண்காட்டில் கிடைத்த திருமேனிகள் அவை. மாயூரம் திரிபுராந்தகர், தஞ்சையில் கிடைத்த வீணாதர தக்‌ஷிணாமூர்த்தி, திருவாலங்காடு நடராஜரும் காளியும்.. என்று சொல்லிக் கொண்டே போகலாம். உலோகத்தில் அவைதான் உச்சம் என்பேன் நான். அதேபோலத்தான் பல நடராஜர் சிலைகளும். இவற்றை விட வேறு எந்தக் கொம்பனால் சிறப்பாகத் திருமேனிகளை வடித்துவிட முடியும் என்ற கர்வமேகூட எனக்குண்டு.

ஆனால் அந்த நம்பிக்கையை அசைத்துப் பார்த்துவிட்டது, புனோம் பென் அரும்பொருளகத்திலுள்ள ஒரு விஷ்ணு சிலை. இத்தனைக்கும் அதில் வேலைப்பாடு அதிகம் என்று சொல்லிவிட முடியாது. ஆனாலும் அதில் சொல்ல முடியாத என்னமோ இருக்கிறது. அது என்னைச் சுற்றிச் சுற்றி வர வைத்தது. இராவணன் திரைப்படத்தில், காட்டாற்றை மறித்தவாறு கிடக்கும் விஷ்ணு சிலையின் மூலம், இந்தச் சிலையாகத்தான் இருக்க முடியும். படத்தின் கலை இயக்குநர் புனோம் பென் வந்து இந்தச் சிலையைப் பார்த்தாரா அல்லது படத்தில் இதைப் பார்த்து மயங்கினாரா தெரியவில்லை.

புனோம் பென் விஷ்ணு சிலை 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. மார்பளவுச் சிலைதான் கிடைத்திருக்கிறது. அதன் கீழே உள்ள பகுதி கிடைக்கவில்லை. முதலில் வடிக்கப்பட்டதே மார்பளவுக்குத்தானா அல்லது முழுமையாகவே பள்ளி கொண்ட பெருமாளாக வடிக்கப்பட்டதா என்பதை ஊகிக்க முடியவில்லை. மார்பளவிலேயே முழுமையான சிலையாக இருந்திருக்கவும் வாய்ப்புள்ளது. ஒருவேளை முழுமையான சிலையாக இருந்து முழுமையாகவே அது கிடைத்தும் இருந்தால், உலகின் ஒப்பற்ற சிலைகளில் ஒன்றாக அது இருக்கும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

1936-ஆம் ஆண்டு சியெம் ரீப்பில், மேற்குப்புற மெபோன் ஆலயத்தில் புதையுண்டு கிடந்த இந்தச் சிலை எதேச்சையாகக் கண்டுபிடிக்கப்பட்டது. 1950-இல் அரும்பொருளகத்துக்குக் கொண்டு வரப்பட்டதாகக் குறிப்பிடுகிறது அரும்பொருளகக் கையேடு. சிதிலமடைந்த சிலைதான்.

நான்கு கைகளில், வலப்பக்கக் கைகள் இரண்டுதான் உள்ளன. அவையும் முழுமையாக இல்லை. தலையின் பின்பகுதி அரித்துப் போயிருக்கிறது. ஆனால் முகம் முழுமையாகக் கிடைத்திருக்கிறது. சதுர வடிவிலான அப்பட்டமான கெமர் முகம். பார்த்தசாரதி கோயில் பெருமாளைப் போல மீசையுள்ள விஷ்ணு. தடித்த உதடுகள். பெரிய காதுகள். மீசை, புருவம், கண்களில் இலேசான பள்ளம் உள்ளது. அந்த இடத்தில் அருமணிகள் பதிக்கப்பட்டிருக்க வேண்டும். இங்குள்ள சில சிவன் சிலைகளிலும் இதுபோன்ற பள்ளம் உள்ளது.

மார்பில் அழகான இரத்னாஹாரம் துலங்குகிறது. நடுவிலுள்ளது பெரிய இரத்தினக் கல். அதைச் சுற்றி நான்கு பக்கங்களிலும் நான்கு சிறிய கற்கள். உள்ளீடற்ற உலோக வார்ப்புச் சிலை. உட்கூடு தெளிவாகத் தெரிகிறது. இரண்டு கைகளிலும் கடகவளையும் கங்கணமும் உள்ளன. இரத்னாஹாரத்தின் பின்பகுதியில் 11 முத்துத் தொங்கல்கள் உள்ளன. தலை அலங்காரம் எப்படி இருந்திருக்கும் என்று தெரியவில்லை. அநேகமாகத் தலைக்குத் தனியான மகுடம் செய்து பொருத்தியிருக்க வேண்டும்.

தலைக்கும் அணை கொடுக்கும் கைக்கும் இடையே சிறிய இடைவெளி உள்ளது. அருமணிகள் பதித்த பெரிய கெமர் மகுடம் தனியாகப் பொருத்தப்பட்டிருக்கலாம். மிக ஒயிலாகப் படுத்திருக்கிறது சிலை. அரும்பொருளகத்தின் உள்ளே நுழைந்தவுடன் இடப்பக்கத்தில் கடைசியில் கிடத்தப்பட்டிருக்கிறார் விஷ்ணு.

ஆனால் உள்ளே போனது முதல் வெளியேறும் வரை என்னால் அந்தச் சிலையை விட்டுக் கண்ணையே எடுக்க முடியவில்லை. அப்படி ஒரு அபார ஈர்ப்பு அதனிடம். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்த வெண்கலச் சிலையை வடிக்கும் உலோகவியல் தொழில்நுட்பம் கெமர் கலைஞர்களிடம் இருந்திருக்கிறது. உலோகத் திருமேனிகளுக்குள் அருமணிகளைப் பதிக்கும் தொழில்நுட்பமும் இவர்களுக்குக் கைவந்திருக்கிறது.

புனோம் பென் அரும்பொருளகத்துக்குள் கேமராவுக்கு அனுமதியில்லை. அதனால் நல்ல படங்களை எடுக்க முடியவில்லை. ஆனாலும் கைத் தொலைபேசியில் படம் எடுப்பதை அங்கிருந்த ஊழியர்கள் கண்டுகொள்ளவில்லை. மற்றவர்களும் எடுத்ததால் நாங்களும் ஐஃபோனில் படம் எடுத்துக் கொண்டோம். உலோகம், கல், மரம், எனத் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு அரும்பொருட்கள் அழகாகக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. எல்லாமே, இந்து, பௌத்த சமயத் திருவுருவங்கள்தான். ஆனால், அந்தச் சிலைகளின் படைக்கலங்களை வைத்துத்தான் அவற்றை சிவன், விஷ்ணு, பிரம்மா, இலக்குமி என்று நம்மால் அடையாளங்காண முடிகிறது. கெமர் முகமுள்ள சிவனை நம் உள்மனம் ஏற்க மறுக்கிறது. ஆனால், சற்று நேரம் அரும்பொருளகத்தைச் சுற்றிவந்ததும் அந்த வேறுபாடு மறையத் தொடங்குகிறது.

இந்த அரும்பொருளகத்துக்கு வந்ததற்கு, இந்த விஷ்ணு சிலை ஒன்றுபோதும். மற்ற எல்லாமே போனஸ்தான் என்று நாங்கள் பேசிக்கொண்டோம். எங்களைத் தவிர ஓரிரு சீனர்கள் வந்திருந்தார்கள். உள்ளூர் ஆட்கள் கிட்டத்தட்ட இல்லை எனலாம். இங்கே ஓரிரு மணி நேரம் செலவிட எங்களுக்கு நேரமிருந்தது. உலோகச் சிலைகள் பகுதியில்தான் நான் அதிக நேரத்தைச் செலவிட்டேன். இது ஒரு பயனுள்ள, முழுமையான நாள் எங்களுக்கு. இன்று நாங்கள் வாழ்ந்தோம்.

- பொன். மகாலிங்கம்

 

 

பொன். மகாலிங்கம் - சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள - This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.