மங்கள வாழ்வருளும் மங்களநாயகி

14 April 2018
K2_ITEM_AUTHOR 

அம்பிகையின் 51 சக்தி பீடங்களில் விஷ்ணு சக்தி பீடமாகத் திகழ்கிறது கும்பகோணம் கும்பேஸ்வரர் ஆலய மங்களாம்பிகை சந்நதி. கல்வியில் சிறந்து விளங்க விரும்புவோர், தொழில் துவங்குவோர், திருமணத்தடை உள்ளோர், குழந்தை பாக்கியம் வேண்டுவோர், குபேர வாழ்வு விரும்புவோர் மங்களாம்பிகைக்கு ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் செம்பருத்திப் பூவால் அலங்காரம் செய்து அர்ச்சனை செய்தால் வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை. கோயிலின் முன்பு பொற்றாமரைக் குளம் இருக்கிறது. மகாமகத்திற்கு வருபவர்கள் மகாமக குளத்தில் நீராடிய பிறகு பொற்றாமரைக் குளத்திலும் நீராடுவர். இத்தலத்தின் தலவிருட்சமாக வன்னிமரமும், தல தீர்த்தங்களாக மகாமகக் குளமும், காவிரியாறும் உள்ளன. மங்களநாயகிக்கு ‘மந்திரபீட நலத்தாள்’ எனும் திருநாமமும் உண்டு. சம்பந்தர் இவளை ‘வளர்மங்கை’ என அழைக்கிறார். சிவபெருமான் தனது திருமேனியில் பாதியை அம்மனுக்கு வழங்கியதைப்போல், தனது மந்திர சக்திகளில் 36 ஆயிரம் கோடியை இத்தல நாயகிக்கு வழங்கியுள்ளார். அம்பாளுக்கென 36 ஆயிரம் கோடி மந்திர சக்திகள் உள்ளதால், 72 ஆயிரம் கோடி மந்திர சக்திகளுக்கு அதிபதியாக ‘மந்திரபீடேஸ்வரி’ என்ற திருநாமமும் பெறுகிறாள்.