கழுகுமலை கோயிலில் திருக்கல்யாணம்


கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கழுகாசலமூர்த்தி கோயிலில் கடந்த 21ம் தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு அதிகாலை காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு கழுகாசலமூர்த்திக்கு சிறப்பு அபிசேகம், ஆராதனைகள் நடந்தது. மாலை 5 மணிக்கு பவுர்ணமி கிரிவலம் நடந்தது.
இதையடுத்து கழுகாசலமூர்த்தி வள்ளி, தெய்வானைக்கு திருமண பட்டாடைகள் உடுத்தி மேளதாளத்துடன் வசந்த மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இரவு 7.30 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதையொட்டி பக்தர்களுக்கு குங்குமம், மஞ்சள் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
12ம் திருநாளான நேற்று சுவாமி வள்ளி, தெய்வானையுடன் பெரிய பல்லக்கிலும், சோமாஸ்கந்தர் சிறிய பல்லக்கிலும் வீதியுலா வந்து பட்டினப்பிரவேஷம் சென்றனர். 13ம் திருநாளான இன்று மாலை 7 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெற்றது.



Leave a Comment