கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில் தூக்க நேர்ச்சை


கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில் தூக்க திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் 1,546 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை அளிக்கப்பட்டது. கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தூக்க திருவிழா சிறப்பு வாய்ந்தது. திருமணம் முடிந்து குழந்தை பேறு கிடைக்கப் பெறாத தம்பதியினர், குழந்தை பேறு வேண்டி பத்ரகாளி அம்மனை வேண்டிக் கொள்வார்கள். அந்த வேண்டுதலின் பலனாக குழந்தை பேறு பெற்றவர்கள், தங்கள் குழந்தைகளை பங்குனி மாதம் பரணி நாளில் நடைபெறும் தூக்க திருவிழாவுக்கு அழைத்து வந்து தூக்க நேர்ச்சை செலுத்துவார்கள். இந்த ஆண்டுக்கான தூக்க திருவிழாவையொட்டி, அம்மன் திருமுடிகள் வட்டவிளையில் அமைந்திருக்கும் பிரதான கோவிலில் இருந்து திருவிழா நடைபெறும் வெங்கஞ்சி கோவிலுக்கு கடந்த 12-ந் தேதி மேள தாளம் முழங்க கொண்டு வரப்பட்டன. அதைத் தொடர்ந்து தூக்க திருவிழா தொடங்கியது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். விழா நாட்களில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் வண்டியோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.

10-ம் திருவிழாவான நேற்று சிறப்பு வாய்ந்த தூக்க திருவிழா நடந்தது. இதையொட்டி முட்டுகுத்தி நமஸ்காரத்தை தொடர்ந்து, கோவிலில் முன்னால் அமைக்கப்பட்டிருந்த பச்சை பந்தலில் அம்மன் எழுந்தருளினார். அதைதொடர்ந்து தூக்கக்காரர்களின் அணிவகுப்பு ஊர்வலம் மேளதாளம் முழங்க நடைபெற்றது. கீழ்விளாகம் தறவாட்டில் இருந்து கண்ணநாகம் வழியாக கோவில் வளாகத்தை ஊர்வலம் வந்தடைந்தது. ஆண்டுதோறும் தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்படும் குழந்தைகள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்த ஆண்டு 1,546 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்பட்டது.



Leave a Comment