பங்குனி உத்திரத்தன்று காவடி எடுப்பதின் மகிமை


முருகக் கடவுளின் விழாக்களில் பங்குனி உத்திரம் திருவிழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக பழனி கோவிலில் பங்குனி உத்திரம் விழா சிறப்பு வாய்ந்ததாக பக்தர்களால் கருதப்படுகிறது. பங்குனி உத்திர விழாவின்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வருவார்கள். முருக பக்தர்கள் காவடி எடுப்பதற்கு ஒரு புராண கதைகள் இருப்பதாக கூறப்படுகிறது.
சிவன்-பார்வதி திருமணத்தின் போது, அவர்களது வைபோகத்தை காண தேவர்களும் முனிவர்களும் கயிலைக்கு புறப்பட்டுச் சென்றனர். இதன் காரணமாக வடக்கு திசை தாழ்ந்தும், தென் திசை உயர்ந்தும் காணப்பட்டது. பூமியை சரி செய்யும் பொருட்டு சிவபெருமான், அகத்திய முனிவரை தென் திசைக்கு அனுப்பி வைத்தார். அங்கு பொதிய மலையில் தங்கிய அகத்திய முனிவர் தாம் வழிபட சிவகிரி, சக்திகிரி என்னும் இரு சிகரங்களைக் கொண்டு வருமாறு தன் சீடனாகிய இடும்பாசுரனிடம் கட்டளையிட்டார்.
இடும்பாசுரன் மிகப்பெரிய பக்திமான். தன் குருவான அகத்தியர் இட்ட கட்டளையை நிறைவேற்ற தன் மனைவி இடும்பியுடன் கயிலை சென்று முருகப்பெருமானுக்கு உரிய கந்தமலையில் உள்ள சிவகிரி, சக்திகிரி என்னும் இரு குன்றுகளையும் பெயர்த்தெடுத்து ஒரு பெரிய பிரமதண்டத்தின் இரு புறங்களிலும் காவடியாகக் கட்டினான். அதனை தனது தோளின் மீது வைத்துக் கொண்டு பொதிய மலைக்குத் திரும்பி வரும்வழியில் திருவாவினன்குடிக்கு மேலே ஆகாயத்தில் பறந்தபோது முருகப்பெருமான் அவ்விரு மலைகளையும் அங்கேயே இறங்குமாறு செய்து அவ்விடத்திலேயே நிலைபெறச்செய்துவிட்டார்.
தன்னை யறியாமல் தரையில் இறங்கிய இடும்பன் எவ்வளவு முயற்சித்தும் பிரமதண்டத்தின் ஓரங்களில் கட்டிய மலைகளை அசைக்க கூட முடியாததை எண்ணி திகைத்துப்போனார். அப்போது சிவகிரி குன்றின் மீது கோவணத்துடன் அழகிய சிறுவன் வடிவில் நின்று நகைத்துக் கொண்டிருந்ததை இடும்பன் கண்டுள்ளார்.
அச்சிறுவனால்தான் மலையை அசைக்கக்கூட முடியவில்லை எனக்கருதிய இடும்பாசுரன் அச்சிறுவனை மலையிலிருந்து இறங்கும்படி அதட்டினான். சிறுவனோ மலை தனக்கே சொந்தம் என வாதிட்டான். சினம் கொண்ட இடும்பாசுரன் சிறுவனை தாக்க முயன்றான். தாக்க வந்த இடும்பன் வேரற்ற மரம் போல் சாய்ந்துவிட அவன் மனைவி இடும்பி கணவனை காப்பாற்ற சிறுவனை வேண்டினாள்.
தன் தவ வலிமையால் நிகழ்ந்தவற்றை அறிந்த அகத்தியர் முருகப்பெருமானை வணங்கினார். அக்கணமே இடும்பாசுரனும் உயிர்பெற்று எழுந்து முருகப்பெருமானின் திருவிளையாடல் அறிந்து மூவரும் முருகப்பெருமானை வணங்கி பக்தி யோடு துதித்தனர். குரு பக்தியை மெச்சிய முருகப் பெருமான் இடும்பனை பழனி தலத்தின் காவல் தெய்வமாக இருக்கும்படி பேரருள் செய்தார்.
இரு குன்றினையும் காவடிபோல் தூக்கி வந்த இடும்பாசுரன் முருகப்பெருமானின் திருவருளைப் பெற்றதுபோல் இன்றும் பக்தர்கள் காவடி தூக்கிச்சென்று முருகப்பெருமானின் பேரருளைப் பெறுகின்றனர். இளவரசனாக முருகன் இடும்பனுக்குக் காட்சியளித்ததால் இன்றும் பழனி முருகனுக்கு செய்யப்படும் ராஜ அலங்காரம் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.



Leave a Comment