முருகனுக்கு உகந்த விரதங்கள்!


வெள்ளிக்கிழமை, கார்த்திகை, வெள்ளிக்கிழமை விரதம், சஷ்டி ஆகியவை முருகனுக்கு உரிய முக்கிய விரதங்கள் ஆகும்.
கார்த்திகை விரதத்தின் சிறப்பைச் சிவபெருமான் கார்த்திகைப் பெண்களுக்கு அருளினார். கார்த்திகைப் பெண்கள் குமரக்கடவுளை வளர்த்த காரணத்தால், அவர்களுடைய நாளான கிருத்திகை நட்சத்திரத்தில் விரதம் இருந்து, குமரப்பெருமானை வழிபடுவோர் கல்வி, செல்வம், ஆயுள், தர்மபத்தினி, நன்மக்கள், நிலபுலம் யாவும் பெற்று வாழ்வார்கள் என்று சிவபெருமான் அருள்புரிந்தார்.
கார்த்திகை மாதம் பரணி நாளில் விரதம் தொடங்கி, வழிபாடு செய்து, அடுத்த நாள் கார்த்திகையில் விரதம் இருந்து முறைப்படி வழிபாடு செய்து, அடுத்த நாள் ரோகிணி காலையில் நீராடி, நித்திய வழிபாடு செய்து அடியார்களோடு கூடி உண்ண வேண்டும். பின்னர் மாதந்தோறும் கார்த்திகையில் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும்.
நாரதர், சப்தரிஷிகளிலும் மேன்மையுற விரும்பி, அதற்கான விரதத்தை அருளுமாறு விநாயக்கடவுளை வேண்டிக் கொண்டார். அவர் அருளியவாறு, பன்னிரண்டு ஆண்டுகள் கார்த்திகை விரதம் இருந்து மேன்மை அடைந்தார்.
வெள்ளிக்கிழமை விரதம்:
வெள்ளிக்கிழமை விரதம், ஐப்பசி மாதம் முதல் சுக்கிர வாரத்தில் தொடங்கி, முறைப்படி விரதம் அனுஷ்டித்து, பின்னர் வெள்ளிக்கிழமை தோறும் விரதம் இருக்க வேண்டும். வெள்ளிக்கிழமை விரதத்தின் சிறப்பை வசிஷ்ட முனிவர், முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு எடுத்துக் கூறினார். அவர் அனுஷ்டித்து மேன்மையுற்றார்.
பகீரதன் என்னும் மன்னன் வெள்ளிக்கிழமை விரதம் மேற்கொண்டு, கோரன் என்னும் அரக்கனை வென்று இழந்த தன்னுடைய அரசு உரிமையை மீண்டும் பெற்றுப் புகழ் பெற்றான்.
கந்த சஷ்டி விரதம் :
கந்தசஷ்டி என்ற பிரபலமான விரதம் ஐப்பசி மாதம் சுக்கில் பட்சத்தில் வரும். பிரதமை நாளில் தொடங்கி, சஷ்டி வரை ஆறு நாட்கள் முறைப்படி விரதம் இருக்க வேண்டும். அந்த நாட்களில் காலையில் நீராடி, வழிபாடு வீட்டிலும் கோயிலிலும் செய்து, முருகன் சரிதத்தைக் கேட்டு அல்லது படித்து, முருகன் நாமத்தை ஜெபித்து, ஏழாம் நாள் காலையில் வழக்கப்படி வழிபாடு செய்து, விரதத்தை நிறைவேற்ற வேண்டும். அதன் பின்னர் மாதந்தோறும் வளர்பிறை சஷ்டி விரதம் இருக்கலாம். சஷ்டி விரதம் இருப்பவர்களின் வினைகள் அகலும், எண்ணிய காரியங்கள் நிறைவேறி, புண்ணியமும் கிடைக்கும்.
கந்த சஷ்டி விரதத்தை முறைப்படி அனுஷ்டித்த முசுகுந்தச் சக்கரவர்த்தி எல்லா நலன்களும் பெற்றுச் சிறப்புடையவரானார்.
குமார சஷ்டி விரதம் :
ஆனி மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டியும், கார்த்திகை மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டியும் குமார சஷ்டி விரதம் எனப்படும். கார்த்திகை மாத வளர்பிறைக்கு குமார சஷ்டியைச் ‘சுப்பிரமணிய சஷ்டி’ என்றும், ‘அனந்த சுப்பிரமணிய பூஜை’ என்றும் கூறுவர்.
அனந்த சுப்பிரமணிய பூஜை:
‘சுப்புராயன்’ என்ற பெயர் முருகனையும், நாகப்பாம்பையும் ஒருங்கே குறிப்பிடுகிற பெயராம். திருமணமாகி நீண்ட காலம் மகப்பேறில்லாதவர்கள் அனந்த (நாக) சுப்பிரமணிய பூஜையை நிறைவேற்றினால் மகப்பேறு நிச்சயம் கிடைக்கும். முருகனைப் பாம்பு வடிவத்தில் வழிபடலாம். அல்லது, இணைந்த இரு பாம்புகளுக்கிடையில் அமைந்த முருகனையோ, பாம்பின் முடிமீது அமைந்த முருகனையோ வழிபட்டால் நாக தோஷங்களும், பிற தோஷங்களும் விலகும். இதற்கு நிகராக இரு தேவியருக்கு இடையில் எழுந்தருளிய முருகனை வழிபடலாம். பக்தர்கள் மகப்பேற்றை வேண்டினால் முந்தி வந்து அருள் புரிபவன் முருகன். அவனே குழந்தையாக வடிவெடுத்து வருவான் என்றும் நம்புகின்றனர்.



Leave a Comment