பாம்பன் சுவாமிகளுக்கு முருகன் சொன்ன பாடம்


 

அருணகிரிநாதரைத் தன் ஞானகுருவாக  ஏற்றுக்கொண்டு அவர் வழியில் முருகன் துதிபாடியவர் பாம்பன் சுவாமிகள்.

 தமிழகத்தில் இராமேஸ்வரம் அடுத்த பாம்பன் என்னும் ஊரில் செங்கமலத்தம்மையார்,  சாத்தப்பப்பிள்ளை தம்பதியினருக்கு மகனாக பிறந்தார் அப்பாவு. பின்னாளில் முருகனருள் பெற்று ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளான இவரை பாம்பனில்  பிறந்ததினால் பாம்பன் சுவாமிகள் என்ற திருநாமத்தால் அறியப்படுகிறார்.

சிறுவயது முதலே ஒவ்வொரு நாளும்  கந்த சஷ்டி கவசத்தை 36 முறை மனமுருக படிப்பார். தானும் கந்த சஷ்டி கவசம் போலவே துதி பாட வேண்டும் என்று ஆசைபட்டார். இப்படிப் பாடும் ஒவ்வொரு பாடலின் முடிவிலும் தனது  ஞான குருவான அருணகிரிநாதரின் பெயரோடு முடிக்க வேண்டும் என விரும்பினார்.

 ‘கங்கையை சடையிற் பரித்து’ என்னும் முதலடியுடன் தொடங்கி, முருகன் துதிகளை இயற்றியவர்.ஒவ்வொரு நாளும்  உணவு உண்னும் முன் ஒரு பாடலை இயற்றினார் . இப்படியே நூறு பாடல்களை இயற்றி முடித்தார் பாம்பன் சுவாமிகள்.

 

பக்தி வாழ்க்கை

 

பாம்பன் சுவாமிகள்  சுவாமிகளுக்கு திருமண வாழ்வில் விருப்பமில்லை . துறவறமே அவரது மனதின் தீர்மானமாக இருந்தது .ஆனால் சுவாமிகளுக்கு  ‘சடாக்‌ஷர மந்திர உபதேசம்’ செய்த சேது மாதவ ஐயரோ, பாம்பன் சுவாமிகளை  இல்லற  வாழ்வில் ஈடுபடச் சொன்னார். 1872ஆம் ஆண்டு காளிமுத்தம்மையாரை திருமணம் செய்து  மூன்று குழந்தைகளுக்கு தந்தையனார் சுவாமிகள் . குடும்ப வாழ்க்கை இனிக்கவில்லை, சதா நேரமும் முருகனை நெஞ்சில் நிறுத்தியிருந்த சுவாமிகளுக்கு.

 

முருகன் கொடுத்த தண்டனை

 

அந்த கால கட்டத்தில் சுவாமிகளின் தந்தை சிவபதம் அடைந்தார் . இந்நிலையில் துறவறம் பெற பழநி செல்வதாக தனது நண்பர் அங்கமுத்துப் பிள்ளையிடம் சொன்னார். இதை கேட்ட அங்கமுத்துப்பிள்ளை  பழநிக்கு வர பெருமானிடம் இருந்து உத்தரவு வந்ததா என்று சுவாமிகளிடம் வினவினார். சுவாமிகளும் கொஞ்சமும் தயங்காமல் ஆமாம் என்று பதில் தந்தார்.

அதே நாளில் மாலை பாம்பன் சுவாமிகள் முருகனை  மனமுருகி துதிப் பாடிக் கொண்டிருந்தார். அந்த பொழுதில் கோப முகத்துடன் சுவாமிகளின் முன் தோன்றிய முருகப் பெருமான், சினத்துடன் “நான் உத்தரவு தருவதற்கு முன்பே தந்துவிட்டதாகப் பொய் சொன்னாயா?” என்றார்.உடனே பதறிய பாம்பன் சுவாமிகள்  “நான் சுயலாபத்துக்காக அப்படிச் சொல்லவில்லை. ஆன்ம லாபம் கருதித்தான் பொய் உரைத்தேன்” என்றார்.

கோபம் குறையாத முருகப் பெருமான் , “எக்காரணம் கொண்டும் பொய் சொல்லியிருக்கக் கூடாது என்னிடம் இருந்து உத்தரவு வரும் வரை பழநிக்கு வரக் கூடாது” என்று சொல்லி மறைந்தார். இதனால் மனம் சோர்வுற்ற சுவாமிகள் , பழநிக்கு வருமாறு முருகப் பெருமானிடம் இருந்து அழைப்பு வரும் என்று காத்திருந்தார். ஆனால் அவருடைய கடைசிக்காலம் வரை அழைப்பு வரவேயில்லை. ஆன்ம லாபம் கருதிக்கூட பொய் சொல்லக் கூடாது என்பதை உணர்த்தவே முருகப் பெருமான் அப்படி நடந்துகொண்டதாக உணர்ந்தார் சுவாமிகள்.

இந்த நிகழ்ச்சியை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆடி மாதமும் சுக்கிரவாரத்தில் ‘சத்தியத் திருநாளா’கக் சுவாமிகளின் அடியார்கள் கடைபிடித்து வருகிறார்கள். அடியாரின் வழி நின்றி தாங்களும் சத்தியத்தை மீறக் கூடாது என்பதே இந்த சத்தியத் திருநாளின் நோக்கம்.

 சுவாமிகள் பிரப்பன்வலசை என்னும் ஊரில் முருகனிடம் உபதேசம் வேண்டி தவத்தில் ஈடுபட்டார். தவத்தைத் தடுக்க  பல்வேறு இடையூறுகள் வந்தன. முருகன் திருநாமத்தால் தடைகளை  தகர்த்து எறிந்தார் சுவாமிகள்.

 தவம் இருந்த ஏழாம் நாள் இரவு, அடியார் உருவத்தில் முருகன் வந்தார். சுவாமிகளிடம் ஒரு சொல்லைச் சொல்லிவிட்டு மறைந்தார். சுவாமிகள் அந்தச் சொல்லை உச்சரித்தபடியே தவத்தில் ஆழ்ந்தார் . முப்பத்தைந்தாம் நாள் தவத்தில் இருந்து எழச் சொல்லி அசரீரி கேட்டது. எம்பெருமான் சொன்னால் மட்டுமே எழுவேன் என்று சுவாமிகள் சொன்னார். இது முருகன் கட்டளை என்று பதில் வந்த பிறகே தவத்தில் இருந்து எழுந்தார் பாம்பன் சுவாமிகள். உயிர் எழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள் எண்ணிக்கையை ஒன்றிணைத்து சண்முகக்கவசம் பாடினார். இந்த 30 பாடல்களையும் பாடினால் எல்லா துயரங்களும் தூர விலகும்.

 

அரசு மருத்துவமனையில் முருக தரிசனம்.

 

ஒரு முறை எலும்பு முறிவுடன் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சுவாமிகள். மூப்பின் காரணமாகவும், சுவாமிகள் உப்பு இல்லாத உணவை உண்பதாலும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் மறுத்துவிட்டனர். அப்போது வானத்தில் இரண்டு மயில்கள் தோகை விரித்தாடின. இன்னும் பதினைந்து தினங்களில் குணமாகும் என்ற அசரீரி கேட்டது. அதைத் தொடர்ந்து குழந்தை வடிவில் முருகப் பெருமான் காட்சியளித்தார். சுவாமிகளின் கால் குணமானது. சென்னை அரசு மருத்துவமனை பதிவுக்கல்லில் இந்தத் தகவல் இன்றளவும் சாட்சியாக உள்ளது.

 

முருகப் பெருமான் மீது 6666 பாடல்களைப் பாடிய பாம்பன் சுவாமிகள், தமது 79ஆவது வயதில் 30-5-1929 வியாழக்கிழமை அன்று காலை 7.15 மணிக்கு, பிராண வாயுவை உள்ளிழுத்து மகாசமாதியில் ஆழ்ந்தார். இதை அறிந்த அன்பர்கள் பலர் சுவாமிகளை வந்து தரிசித்து சென்றனர். மறுநாள் (31-5-1929), சுவாமிகளின் திருமேனியை திருவான்மியூரில் வைத்து  சமாதிக்கோவில் அமைத்தனர். சுவாமிகளின் சமாதிக்கோவில் மிகவும் மகிமை வாய்ந்தது. அங்கு சென்று வாழ்வில் வளம் பெற்றோர் பலர். திருவான்மியூர் பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இத்திருக்கோவில்.

                                                                



Leave a Comment